கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.
அரசியலில் அனுபவ முதிர்ச்சியும், செயற்பாடுகளில் தெளிவும், சேவையில் சிறப்பும்,
பழகுவதில் பக்குவமும் கொண்ட உங்களுடன் ஊரின் தேவைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அட்டாளைச்சேனை பிரதேசம் வலப்பக்கமாக இருக்கும் நிந்தவூரையும் இடப்பக்கமாக இருக்கும் அக்கரைப்பற்றையும் விட சனத்தொகையில் அதிகூடிய பிரதேசம் என்பதுடன்
இந்தப் பெரிய பிரதேசத்தில் சரியான
👉மின்சார சபை நிரந்தர ES ஒருவரில்லை,
👉அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிகளின் ATM Deposit ஏற்பாடில்லை,
👉தீயணைப்பு பிரிவில்லை,
👉சரியான வளம்கொண்ட நூலகமில்லை,
👉இன்றைய இளைஞர்களை தவறுகளில் இருந்து காப்பாற்ற விளையாட்டில் கவனம் செலுத்த வைக்கவேண்டும்.
ஆனால் பொது விளையாட்டு மைதானத்தில் எந்த வசதியுமில்லை.
👉ஊரில் சிறியவர்களுக்கான சரியான பொழுது போக்கு பூங்கா ஒன்றில்லை.
இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை குறைபாடுகள்.
ஆனால் அரசியல் இலாபம் கருதி ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஊரில் ஒரு அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தட்டுத் தடுமாறி திரிந்த காலங்கள் கடந்து இன்று உங்களை மக்கள் ஓர் உயர் பதவியில் அமர்த்தி இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் நீங்கள் இருந்த கட்சியின் தலைவர் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும் நீங்கள் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் (சுமார் 8 வருடங்கள்) இருந்த காலம்
அன்று அத்தனை சேவைகளும் மொத்தமாய் செய்யக்கூடிய பொற்காலமாக இருந்தது.
ஆனால் கவலையான விடயம் அட்டாளைச்சேனை மக்கள் வாக்களிக்கவில்லை ஆதரிக்கவில்லை என்பதனாலோ எனக்கு தெரியாது அட்டாளைச்சேனையூர் சேவையில் மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டமை ஒரு கசப்பான உண்மைதான்.
நம்மூர் அன்று உங்களுடைய பதவிக் காலத்தில் சரியான சேவையைக் கண்டிருக்குமானால் இரண்டாவது காத்தான்குடியாக அட்டாளைச்சேனை திகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மாறாக இன்று ஊர் மிக மோசமான நிலைமையில் எங்கு பார்த்தாலும் பள்ளம் படுகுழி கொண்ட வீதிகளும் சரியான திட்டமிடலும் வடிகான்களும் இல்லாத கொங்றீட் வீதிகளும் ஊரின் அபிவிருத்தியை நாசப்படுத்தி இருக்கின்றமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
😞💥அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் இரண்டாவது பெரிய வீதியான கோணாவத்தை OPA வீதி
அல்-முனீரா பாடசாலை வீதி சந்தியில் இருந்து பாலமுனை உதுமாபுரம் வரை உள்ள வீதி கடந்த சுனாமிக்கு பிறகு யுனிசெப் திட்டத்தினால் அமைக்கப்பட்டது.
ஆனால் அன்று இந்த வீதியை அபிவிருத்தி செய்கின்ற பொழுது அன்றிருந்தவர்கள் யாரும் தலையிட்டு இதனுடைய செயற்பாடுகளில் தெளிவு படுத்தியிருக்கவில்லை என்பதனை இந்த வீதி தெளிவாக காட்டுகிறது.
வீடுகளை தாழவிட்டு வீதியை உயரமாக அமைத்து அத்தனை வீடுகளையும் வெள்ளத்தில் மூழ்க வைத்திருக்கும் இந்த வீதி இன்று மிக மோசமாக குன்றும் குழியுமாக உடைந்து காணப்படுவதனை நீங்கள் காணாமல் இருக்க முடியாது.
பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதோ
பள்ளிவாசலுக்கு மக்கள் செல்வதோ
துவிச் சக்கர வண்டியோ முச்சக்கர வண்டிகளோ
பெரிய வாகனங்களோ
இந்த வீதியால் செல்வது என்பது மிக கஷ்டமாக இருப்பதை யாரும் அறியாமலில்லை.
அதுபோல் இந்த வீதியில் மாவட்ட ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை,
அந்நூர் மகா வித்தியாலயம், ஜும்மா பள்ளி வாயில், சஹ்வா அரபிக் கல்லூரி என்று முக்கியமான பொது நிறுவனங்கள் காணப்படுகின்றன.
இந்த வீதி இதுவரையில் எந்த அரசியல்வாதியினுடைய கண்களுக்கும் படாமல் இருப்பது ஏன்?
இந்த வீதி விடயத்தில் இந்த பகுதியில் இருக்கும் மக்களை புறக்கணித்து இருக்கிறீர்களா? உங்களிடமும் உங்களுடைய முன்னாள் தலைவராக இருந்த உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா சேரிடமும் நான் பிரதேச சபை உறுப்பினராக இருந்த போது பல தடவைகள் DCC கூட்டத்தில்
நீங்கள் கோணாவத்தையை அத்திப்பட்டியாக மறந்து விட்டீர்கள் என்று நானே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
நீங்கள் நினைத்திருந்தால்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக நீங்கள் இருந்தபோது காபட் வீதியாக இந்த வீதியை அமைத்திருக்க முடியும் ஆனால் அன்று நீங்கள் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இன்றும் அதே நிலையில் இவ்வீதி இருப்பதை மன வேதனையுடன் மீண்டும் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.
மத்திய அரசில் நீங்களும் உள்ளூராட்சியில் உங்கள் தவிசாளரும் இருக்கும் நிலையில் இனியாவது இந்த வீதியினை செப்பனிட முயற்சி செய்வீர்களா?
எடுத்துக்காட்டாக ஏறாவூர் நகரசபை நகரபிதா நண்பர் நழீம் ஹாஜியார் அவர்கள் 240 மில்லியன் பெறுமதியான வீதிகளை அரசிடம் பெற்று அவருடைய ஊர் வீதிகளை செப்பனிட ஏற்பாடு செய்கிறார் என்றால் ஏன் உங்களால் முடியாது.
மீண்டும் தொடர்கிறேன்.
நன்றி
எஸ்.எல்.முனாஸ்
21082025


கருத்துகள் இல்லை