கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று (01.06.2026) சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்ட காலமாக பதில் அதிபர்களாக கடமை புரியும் அதிபர்கள் விடயம் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தேசிய பாடசாலைகளுக்கு மின்சார கட்டணமாக மாதாந்தம் 25000.00 வழங்கப்பட்டு வருகிறது. இதேவேளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்பட்டு வரும் 1AB பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சினால் மாதாந்த மின்சார கட்டணமாக 2500.00 வழங்கப்பட்டு வருகிறது.இதனால் கிழக்கு மாகாண 1AB பாடசாலை அதிபர்களும், நிர்வாகமும், பெற்றோரும் பெரிதும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். எனவே கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 1 AB பாடசாலைகளுக்கும் மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படும் மாதாந்த மின்சார கட்டணம் 25000.00 வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு மாகாண சபையில் பிரதம செயலாளர் வெற்றிடத்திற்கு நியமனம் மேற்கொள்ளப்படும் போது கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களில் தற்போது கடமையாற்றும் செயலாளர்களில் சிரேஷ்டமானவர்களை நியமனம் செய்வதன் ஊடாக கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சின்னப்பாலமுனையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான சின்னப்பாலமுனை கடற்கரை வீதி, றஹுமானியாபாத் மத்திய வீதிகளின் நிர்மாணப் பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு தங்களிடம் 06 மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்தும், திணைக்களத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டும் 06 மாதங்களாக தாமதமான நிலையில் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களிடம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஆளுநர், கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்ட காலமாக பதில் அதிபர்களாக கடமை புரியும் அதிபர்கள் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்களுடன் கலந்துரையாடி அதற்கான முடுவெடுப்பதாகவும் , கிழக்கு மாகாண 1AB பாடசாலைகளின் மாதாந்த மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் , பிரதம செயலாளர் நியமனம் இடம்பெறும் போது கிழக்கு மாகாண சபையில் உள்ள சிரேஷ்டமானவர்களை கருத்தில் கொள்வதாகவும், சின்னப்பாலமுனை , றஹுமானியாபாத் மத்திய வீதி தொடர்பான நடவடிக்கைகளை உரிய திணைக்கள தலைவர்களுடன் தொலைபேசி அழைப்பினூடாக கலந்து பேசி விரைவுபடுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.உதுமாலெப்பை அவர்களிடம் தெரிவித்தார்.
(1).png)

கருத்துகள் இல்லை