அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நாளை சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மார்க்கக் கல்வியை முன்னின்று போதித்து வரும் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவின்போது திறமைகளை வெளிக்காட்டிய 68 மாணவிகள் தமக்கான பட்டங்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இப்பட்டமளிப்பு விழாவின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் கல்வியாண்டு வரை பயின்று வந்த 68 மாணவிகள் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
ஹிப்ழு பிரிவு மற்றும் சரிஆ போன்ற பிரிவுகளில் மார்க்கக் கல்வி பயின்று வந்த ஐந்து தொகுதி மாணவிகள் இவ்வாறு பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இவர்களில் 34 மாணவிகள் ஆலிமாக்களாகவும், 34 மாணவிகள் ஹாபிழாக்களாகவும் பட்டம் பெறுவர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு சம்சம் பவுண்டேசனின் தவிசாளர் அஷ்-ஷேய்ஹ் எம்.எச்.முகம்மட் யூசூப் முப்தி கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார். இதேவேளை, பெண்கள் பிரிவு பட்டமளிப்பு நிகழ்வு விஷேட வைத்திய நிபுணர் திருமதி ஆபிதா கையூம் தலைமையில் இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழா தொடர்பாக கல்லூரி அதிபர் அஷ்-ஷேய்ஹ் அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல் ஹலீம் ஹுமைதி பிரகடனம் செய்யவுள்ளார். வரவேற்புரையை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் ஏ.எல்.அனீஸ் நிகழ்த்தவுள்ளதுடன், விஷேட உரையை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பிரதித் தலைவர் யூ.எல்.ஏ.அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளரும் கல்லூரியின் ஆளுநர் சபை செயலாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
முதலாவது பட்டமளிப்பு விழா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கல்லூரியின் ஆளுநர் சபை தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
அவர் கருத்துத் தெரிவிக்கையில், “பெண்கள் மத்தியில் மார்க்க விழுமியங்களைப் போதித்து அதில் துறைசார்ந்தவர்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இக்கல்லூரியின் செயற்பாடுகள் மேலும் சிறப்புற நாம் பல்வேறான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். இம்முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்” என்றார்.


கருத்துகள் இல்லை