Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி! அட்டாளைச்சேனையின் ஆளுமையின் வரலாறு


இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை எனும் பிரதேசத்தில் 1957.01.31 ஆம் திகதி பிறந்தார்கள்.
இவர்கள் தமிழ் பேசும் உலகில் ஷர்கி, பரேலவி என அழைக்கப்படுகின்றனர்.
கல்வி மற்றும் பட்டப்படிப்புகள்

கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியில் 1976ஆம் ஆண்டு மௌலவிப் பட்டம் பெற்றார்கள்.

1983ஆம் ஆண்டு இந்தியா தமிழகம் சென்ற பின் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலவி ஷரீபில் உள்ள ஜாமியா ரிஸ்வியா மன்ழருல் இஸ்லாம் சர்வதேச இஸ்லாமிய கலாசாலை, முபாரக்பூர் ஜாமியா அஷ்றபிய்யா சர்வதேச இஸ்லாமிய கலாசாலைகளில் 1984ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை பாஸில் பட்டம் மற்றும் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாக்கள் பற்றிய மேலதிக ஆய்வுகளில் ஈடுபட்டார்கள்.

ஜாமியா ரிஸ்வியாவில் 14ம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதி இமாமே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ இமாம் அஹமத் ரிழா கான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அன்னவர்களின் திருப்பேரர் இமாம் றய்ஹான் ரிழா கான் (அலைஹிரரஹ்மா) அன்னவர்களின் விஷேட பராமரிப்பில் கல்வி பயின்று அன்னவர்களின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
பரேலவி ஷரீபில் கல்வி பயின்ற இலங்கைத் திருநாட்டின் முதலாவது ஆலிம் பெருந்தகையும் இவர்களாவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பின்னர் இலங்கை வந்து 1995ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் - தத்துவவியலில் விஷேட சிறப்புப் பட்டம் பெற்றார்கள்.

ஆன்மீகம் - கிலாபத்

சிறு வயது முதலே காதிரிய்யா நக்ஷ்பந்திய்யா தரீக்காக்களின் ஷெய்காகிய அல் ஆரிபுபில்லா ஹாமிஷ் ஷரீஆ ஷாஹூத்தரீக்கா செய்கு அப்துல் காதிர் ஸூபி (காயல் பட்டணம் ஸூபி ஹளறத்) கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்களுடன் தொடர்பாகி பைஅத் ஆனார்கள்.

அவர்களின் வபாத்து வரையில் அவர்களுடன் சகல விடயங்களிலும் உருதுணையாக இருந்தார்கள்.

பின்னர் அவர்களின் சிரேஷ்ட கலீபாவாகிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஹாபிழ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காதிரி காஹிரி மஹ்ளரி (மலேசியா வாப்பா ஹளறத்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்தியா காயல் பட்டிணம் சென்று 2009ஆம் ஆண்டு கிலாபத் பெற்றார்கள்.

இவர்களின் மறைவிற்குப் பின்னர் காதிரிய்யா நக்ஷ்பந்திய்யா தரீக்காக்களின் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

ஷெய்குல் காமில் அப்துல் காதிர் ஸூபி ஹளறத் (காயல் பட்டிணம்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களினால் மஜ்லிஸ் முஹிப்புர் றஸூல் என்ற அமைப்பினூடாக செய்து வந்த சன்மார்க்கப் பணிகளை அவர்களது இறுதிக்காலத்தில் தொடர்ந்து செய்து வருவதற்காக இவர்களிடமே ஒப்படைத்தார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கைப் பிரச்சாரங்களிலும் தரீக்கத்தின் வளர்ச்சியிலும் சிறு வயது முதற்கொண்டே தன்னை முழுமையாக அர்ப்பணித்து தன் குருநாதர் விட்டுச் சென்ற பணிகளை அயராது அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றார்கள்.

சேவைகள்:-

ஈமானுக்கு உறுதி சேர்க்கின்ற பல அரிய புத்தகங்களை எழுதியதோடு, பல புத்தகங்களை மொழியாக்கமும் செய்து, பல நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்களுள்
1. சத்தியம் வந்தது (தமிழாக்கம்) அகீதா சட்டக் களஞ்சியம்
2. ஏகத்துவமும் இணைவைத்தலும்
3. அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு செய்வது எப்படி?
4. ஏற்றமாம் தராவீஹ் எட்டேதானா?
5. ஹிதாயத்தின் முதற்படி (பிதாயத்துல் ஹிதாயா) அரபுக் கல்லூரி மாணவர்கள் பாடநூல் தமிழாக்கம் போன்றவை பிரபலமானவைகளாகும்.

மேலும் வஸீலா என்ற பெயரில் மாதமிருமுறையும் ஹிக்மா, புஷ்றா என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகையினையும் வெளியிட்டார்கள்.

1990ல் அகில இலங்கை ரீதியாக ஸுன்னத் வல்ஜமாஅத் மஜ்லிஸுல் உலமா சபையை நிறுவி அதன் பொதுச் செயலாளராக பணி புரிந்தார்கள்.

காலி, கல்முனை, பேருவலை, கொழும்பு ஆகிய இடங்களில் அறபுக்கலாசாலைகளை உருவாக்கினார்கள்.

ஏறாவூர் ஸூபி மன்ஸிலில் மீண்டும் அறபுக் கலாசாலை செயல்பட வைத்தார்கள்.

மஜ்லிஸ் முஹிப்புர் றஸூல் ஊடாக தனது குருநாதரின் பணியினை சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

ஏ.எல். பதுறுத்தீன் ஷர்க்கி பரேலவி ஹளறத் அவர்களின் இத்தூய பணியினை எல்லாம் வல்ல இறைவன் ஏற்றருள்வானாக!

தகவல்: மஜ்லிஸ் முஹிப்புர் ரஸூல்

கருத்துகள் இல்லை