கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் அமைச்சர் உறுதி
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சம்புக்களப்பு, கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கான தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை ஆரம்பிக்க நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் றணசிங்க அனுமதி வழங்கியதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு வடிச்சலுக்கு தடையாக நீர்த்தாவரங்கள் நிரம்பி உள்ளதாலும் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்குத் தடையாக அவை உள்ளதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன்,இப்பிரதேசங்களில் முதலைகளின் தொல்லைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும், பொதுமக்களின் நன்மை கருதியும் இவ்வடிச்சல் பணிகளை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் வீதிஅபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை நீப்பாசன அமைச்சர் ரொசான் றணசிங்கவை அண்மையில் அமைச்சில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
மேற்படி வடிச்சலை சீராக்கும் நோக்குடன் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்துக்கு வழங்கப்பட்ட எக்ஸ்வேட்டர் இயந்திரம் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் இப்பிரதேச நீர்ப்பாசன வடிச்சல் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வியந்திரத்தை விரைவாக திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார். இவ்விடயத்தைக் கேட்டறிந்த நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் றணசிங்க சம்புக்களப்பு, கோணாவத்தை ஆற்றினை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை வழங்கினார்.
அத்துடன் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பிரதேச விவசாயப் பாதைகளை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக கிழக்கு உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை