நலிவடைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுவதே தனது குறிக்ேகாள் என்கிறார்
அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட காதர் முகைதீன் நாசர், அப்துல் குத்தூஸ் பர்சானா தம்பதிகளின் புதல்வரான முஹம்மட் சப்னாஸ் சிறுவயது முதல் கல்வி, கலை, விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும் ஆளுமை பெற்றவராக திகழ்ந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அக்/அந்-நூர் மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தை அட்டாளைச் சேனை மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார்.
இவர் பாடசாலையில் கல்வி பயின்ற காலம் முதலே சமூக சேவைகளிலும், நலன்புரி நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இளைஞர் கழகம், விளையாட்டுக் கழகம் போன்றவற்றில் அவர் பதவிகளை வகித்தார்.
இவர் சா.த மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மேற்படிப்பிற்காக, புலமைப் பரிசில் ஒன்றினூடாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள RK பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இவரது குறிக்கோள் பாடசாலைக் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றும், மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு வெளிநாடுகளில் புலமைப் பரிசில்களை பெற்றுக் கொடுத்து அதன் வாயிலாக அவர்களின் கல்விக்கு உதவுவதாகும். இதன் வாயிலாக அவர் எமது நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாது பல வெளிநாட்டு மாணவர்களுக்கும் இப்பணியின் ஊடாக உதவி வருகின்றார். இவரது உதவியை பெற்று நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவின் மார்வாடி, RK,Jain போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர். ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்களின் மேற்படிப்புக்காக இவர் அதிக உதவிகளை வழங்கியுள்ளார்.
ஏனெனில் நைஜீரியா, சோமாலியா, உகண்டா, எதியோபியா, கானா, சாம்பியா, சூடான் போன்ற வறிய ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்காக பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் இவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. இவர் மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிப்பதில் தொடங்கி அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வரை தேவைப்படும் அனைத்து உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி அவர்களை வழிநடத்தி வருகின்றார். அவர் இப்பணியை கடந்த 03 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வாறு சேவை மனப்பாங்கோடு பணியாற்றும் சப்னாஸ் தேசிய ரீதியில் பல்வேறு அமைப்புகளினூடாக இளைஞர்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இவர் 2022 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் இணைத்துக் கொள்ளப்பட்டார். இவர் ஆசிய International model united nation இல் ஊடகத்துறைக்கு பொறுப்பாளராகவும் பாகிஸ்தானில் humanity lovers என்கிற பெயரில் இயங்கி வரும் இளைஞர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் வெளிநாட்டு விவகார உறுப்பினராகவும் உள்ளார். மேலும் Srilanka unites இல் பிராந்திய ஒருங்கிணைப்பாளராகவும் Eastern youth international model united nation இன் ஸ்தாபக நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் ஊடகத்துறையிலும் 4 வருட காலமாக பல பணிகளை ஆற்றிவருகின்றார்.இவர் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய கட்டுரைகள் தினகரன் உட்பட தேசியப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. கடந்த June 24 ஆம் திகதி நைஜீரியாவினால் முகம்மட் சப்னாஸூக்கு leadership விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது, நைஜீரியாவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள உயர்கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்காக நடத்தப்பட்ட Quiz போட்டிகளில் வெற்றி பெற்று புலமைப் பரிசில் பெற்றுக்கொண்ட 88 மாணவர்களை கௌரவப்படுத்தும் முகமாக நடைபெற்றது.AddalaichenaiNetwork
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய புலமைப் பரிசிலினூடாக இந்திய பல்கலைக்கழகம் சென்று உயர்கல்வியை தொடர இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமையிற்காக சப்னாஸ் கெளரவிக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்வானது நைஜீரியாவின் ஜனாதிபதி மற்றும் மாகாண ஆளநர்கள் தலைமையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சப்னாஸ் கலந்து கொள்ளாவிடினும் அவருக்கான கௌரவம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
United Organization for Education and Sports Development Nigeria எனும் அமைப்பினூடாகவே இந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எதிர்காலத்திலும் இந்த அமைப்பினூடாக நைஜீரிய மாணவர்களுக்கு உதவவுள்ளதாக சப்னாஸ் குறிப்பிட்டார்.
தான் பொருளியல் துறையில் தனது மேற்படிப்பைத் தொடர்கின்றபோதிலும், அது சார்ந்த தொழிலில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும், மாணவர்களுக்கான இவ்வாறான சேவைகளை செய்வதே தனது பெருவிருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது சேவைகளினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்குப் பொறுப்பான அமைப்புகளில் இணைந்து மாணவர்களுக்கு மென்மேலும் உதவிகள் செய்வதே தனது குறிக்கோள் என்று அவர் கூறினார். அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு தனது சேவையை வழங்க உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
றிசாத் ஏ. காதர்
தினகரன்


கருத்துகள் இல்லை